Wednesday 27 October 2010

ஜாதகமும் நானும்!

நான் புகுந்த வீடு என் சொந்த அத்தை வீடு தான் என்றாலும் பெரியாரின் கொள்கை வழி நடப்பவர்கள், ஜாதகம் என்பதிலெல்லாம் நம்பிக்கை இல்லாதவர்கள் என்ற நிலையில் என் வீட்டுக்கு முற்றிலும் வேறான சூழ்நிலைகளுள்ள இல்லத்தில் குடி புகுந்தேன். பெரிய அளவில் கூட்டுக்குடும்பமாக அப்போது எங்கள் கிராமத்தில் திகழ்ந்த வீடு என்பதால் இந்த நம்பிக்கைகள் எல்லாவற்றையும் மீறிய பாசத்திலும் மகிழ்விலும் அதிலேயே ஒன்றிப்போக முடிந்ததுடன் ‘அன்பே உலகம், உழைப்பே கடவுள்’ என்ற நினைப்பில் வாழவும் வளரவும் முடிந்தது. என் மகனுக்குத் திருமண வயது வருகிற வரையில் எந்தப் பிரச்சினையும் இல்லை.

அதற்கப்புறம் தான் ஜாதகப்பிரச்சினைகள் எல்லாம் ஆரம்பமாயின. ஜாதகம், ஜோதிடம் என்பதிலெல்லாம் நம்பிக்கை இல்லாத குடும்பம் என்பதால் பிறந்ததும் என் மகனுக்கு ஜாதகமெல்லாம் எழுதவில்லை.

முதல் கட்டமாக சில முக்கிய திருமண மையங்களில் என் மகனின் விபரங்களைப் பதிவு செய்தேன். சில மாதங்கள் கழித்து வடலூர் அருகில் ஒரு பெண் வீட்டிலிருந்து பேசினார்கள். தந்தை பொறியியல் வல்லுனராக இருந்து இறந்தவர். மற்ற விஷயங்கள் எல்லாம் பிடிக்கவே நானும் எங்கள் இல்லத்தைப் பற்றி, எங்கள் நம்பிக்கைகளைப் பற்றிச் சொன்னேன். அதற்கு பெண்ணின் தாயார், ‘ எனக்கு இந்த ஜாதகப்பொருத்தம் மற்றதெல்லாம் தேவையேயில்லைங்க. நான் கடவுளிடம் பூ போட்டு பார்த்தேன். எல்லாம் சுபமாகவே வந்தது. எனக்கும் என் பெற்றோருக்கும் சம்மதம். நீங்கள் உங்கள் கணவருடன் சென்னைக்கு என் அப்பா வீட்டுக்கு வாருங்கள். மகனையும் வரச்சொல்லுங்கள்’ என்றார். கிட்டத்தட்ட முடிவான விஷயம் என்பதால் என் மகனையும் துபாயிலிருந்து வரச்சொல்லி மூவருமாகப் போய் பெண் பார்த்தோம். ஆனால் பெண்ணின் முகத்திலும் பெண்ணின் அம்மா முகத்திலேயும் உற்சாகமேயில்லை. நாங்கள் திரும்ப ஊருக்கு வந்து சேர்ந்ததும் பெண்ணின் அம்மா கூப்பிட்டு
“என் சொந்தங்கள் அத்தனை பேரும் ஜாதகப்பொருத்தம் சரியில்லை என்கிறார்கள். அவர்களை மீறிக்கொண்டு என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை.” என்று அழுதார். நான் “ பின் ஏன் ஜாதகப் பொருத்தம் தேவையில்லை என்று சொன்னீர்கள்? இதனால் எங்களுக்கு எத்தனை செலவு, அலைச்சல், மனக்கஷ்டம்? நாங்களும் எங்கள் சொந்தக்காரர்களுக்கு என்ன பதில் சொல்வது?” என்று வருத்தப்பட, மறுபடியும் அவர்கள் அழ, அதற்குப்பிறகும்கூட நான் ஜாதகத்தைப்பற்றி ஒன்றும் நினைக்கவில்லை.

அதற்குப்பின் என் சினேகிதி ஒருவருடன் திருச்சியிலுள்ள ஒரு திருமண மையம் சென்றேன். அங்கிருந்த விபரங்களைப் பார்த்துக்கொண்டிருந்த போது, ஒரு முதியவர் என்னருகில் வந்து அமர்ந்தார்.

‘ அம்மா, நான் சொல்வதைத் தப்பாக எடுத்துக்கொள்ளாதீர்கள். உங்களுடைய மகனின் தகுதிகள் அனைத்தும் ரொம்பவும் நன்றாக இருக்கிறது என்று கூறி, இங்கு வருபவர்கள் ஜாதகம் இல்லையென்றதும் வேண்டாமென்று போய் விடுகிறார்கள். எதனால் நீங்கள் ஜாதகம் வைக்கவில்லை?’ என்று கேட்டார். நான் எங்கள் குடும்பத்தைப்பற்றி சொன்னதும் அவர் ‘ அம்மா, உலகம் முழுவதும் இப்போது ஜாதகத்தில்தான் இயங்கிக்கொண்டிருக்கிறது. அது உங்களுக்கு தெரியவில்லை. ஆடையில்லா உலகத்தில் ஆடையணிந்தவன் தான் பைத்தியக்காரன். உலகத்தோடு அதன் போக்கில் நிறைய சமயங்களில் நாமும் போக வேண்டியிருக்கிறது. நீங்கள் அடுத்த முறை வரும்போது ஜாதகம் எடுத்து வாருங்கள்” என்றார். எனக்கு திருவள்ளுவரின் ‘ உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பல கற்றும்’ குறள் தான் ஞாபகம் வந்தது.

என் சினேகிதி தனக்குத் தெரிந்த ஒரு பெரியவரிடம் ஜாதகம் கணித்து எடுத்து வந்து தந்தார். இடையே திருச்சியில் வேறொரு திருமண மையத்தில்[ சூர்யா மையம் என்று வைத்துக்கொள்வோம்] அதன் நிறுவனர் ‘ நான் முதலில் வரனின் ஜாதகத்தைக் கணித்து வைத்துக் கொண்டு, அதன் பிறகுதான் பெண்களின் வீட்டுக்கு எடுத்துச் செல்வேன்” என்றார். அவர் அதுபோல பெண்கள் வீட்டுக்கும் பையன்களின் வீட்டுக்கும் ஜாதகங்களை எடுத்துச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். நானும் அந்த ஜாதகத்தையும் கையில் எடுத்து வந்தேன். இடையே என் உறவினர் அவருடைய நண்பரிடம் [ஜாதகம் கணிப்பதில் சூரப்புலி என்று பெயர் வாங்கியவர் ] ஜாதகம் எழுதி வாங்கி வந்தார். ஆக மூன்றாவது ஜாதகமும் வந்து சேர்ந்தது. இடையே எனக்கு பல வருடங்களாக பழக்கமான பெரியவர் ஒருவர்- அமெரிக்காவில் இருப்பவர்- என் வேண்டுகோளுக்காக அவரும் ஜாதகம் கணித்து அனுப்பியிருந்தார்.



இடையே ஒரு நாள் மயிலாடுதுறையில் இருக்கும் ஒரு தகவல் மையத்திலிருந்து ஒரு பெண்ணைப்பற்றிய தகவல்களை எடுத்து வந்திருந்தேன். அதன் நிறுவனர் தெரிந்தவர்தான் என்றாலும் நான் எடுத்து வந்தபோது அவர் இல்லை. தகவல்களை ஆராய்ந்தபோது, பெண்ணின் வீட்டில் ஏழு பேர் கூடப்பிறந்தவர்கள் என்றும் பெண் முதுகலைப்பட்டம் பெற்றவர், அழகானவர், நல்ல குடும்பம் என்றும், ஆனால் வசதியாக இருந்து நொடித்துப்போன குடும்பம் என்றும் தெரிய வந்தது. அந்தப் பெண் வசித்த ஊரிலிருந்த என் உறவினர்கள், தெரிந்தவர்கள், ‘ பெரிய குடும்பம், வசதியில்லை, வேண்டாம்’ என்று கூற, நான் ‘ நான் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. முதலில் பெண்னை பார்த்து விட்டு வந்து அப்புறம் முடிவு செய்து கொள்ளலாம் என்று சொல்லிவிட்டேன். பெண்ணின் தகப்பனாரைத் தொடர்பு கொண்டு பேசியபோது, அவர் என் மகனின் தகவல்களை அனுப்பச் சொன்னார். அதன்படியே அனுப்பி விட்டு உட்கார்ந்தால், திருமண தகவல் மைய நிறுவனர் என்னை அழைத்து ‘ அந்தப் பெண் வேண்டாம். நம் குடும்பத்திற்கு சரியாக வராது’ என்றார். அப்போதும் நான் மறுத்து, ‘ முதலில் நான் போய் பார்த்து விட்டு வந்து விடுகிறேன். அப்புறம் முடிவு செய்து கொள்ளலாம்’ என்றதற்கு அவர் ஒரேயடியாக மறுத்துப்பேசினார். ஃபோனை வைத்ததும் ஒரே யோசனை மேல் யோசனை! அப்போதுதான் திடீரென்று அந்த எண்ணம் வந்தது! அருகில் அமர்ந்திருந்த என் சினேகிதியிடம் சொன்னேன், ‘ எல்லா ஜாதகங்களையும் எடுத்துப்பார்ப்போம் எல்லாம் ஒரே மாதிரி இருக்கிறதா என்று ஆராயலாம்’ என்று!! நான்கு ஜாதகங்களையும் எடுத்துப்பார்த்தால் தலை சுற்றியது. சந்திரனும் சூரியனும் குருவும் ஒவ்வொரு ஜாதகத்திலும் வெவ்வேறு இடங்களில் அமர்ந்திருந்தார்கள். ஒவ்வொன்றும் வித்தியாசமாக இருந்தது! அப்படியென்றால் எது சரியானது என்று எப்படித்தெரியும்?

தன் நண்பரிடம் ஜாதகம் என் மகனுக்கு எழுதி வாங்கி வந்த என் உறவினரிடம் சென்று அனைத்து ஜாதகங்களையும் தந்து, “ எது சரியானது, ஏன் இப்படி ஒன்றுக்கொன்று வித்தியாசமாக இருக்கின்றன என்று உங்கள் நண்பரிடம் கேட்டு வாருங்கள்” என்று சொன்னேன்.

அவர் வந்து சொன்ன பதில் எனக்கு இன்னுமே தலை சுற்ற வைத்தது!

‘என்னுடைய நண்பர் தூக்கக்கலக்கத்தில் இந்த ஜாதகத்தில் சில தவறுகள் செய்து விட்டாராம். இப்போது சரியாக எழுதிக் கொடுத்திருக்கிறார். உன் அமெரிக்க நண்பர் எழுதிக்கொடுத்ததுதான் சரியானதாம்!’

எனக்கு எப்படி இருந்திருக்கும்? அவரிடம் வருத்தப்பட்டுக்கொண்டு வெளியே வந்தேன். அந்த பெண் வீட்டுக்கு இவர் எழுதிக்கொடுத்த ஜாதகத்தைத்தான் அனுப்பியிருந்தேன். எல்லோரும் சொல்கிற மாதிரி அந்தப் பெண் அமைய வேண்டாம் என்றிருக்கிறது போலிருக்கிறது என்று நினைத்துக்கொண்டேன்.

அடுத்த நாளே அந்தப் பெண்ணின் தகப்பனாரிடமிருந்து ஃபோன்!

‘ அம்மா, எங்கள் பக்கத்தில் என் பெண்ணின் ஜாதகத்துடன் உங்கள் பையனின் ஜாதகம் மிக நன்றாகப்பொருந்தியிருக்கிறது, எப்போது பெண் பார்க்க வருகிறீர்கள்?’

நான் அனுப்பியதே தவறான ஜாதகம் என்று எப்படிச் சொல்லுவது? ‘ எங்கள் ஜோதிடர் அவ்வளவாகப் பொருந்தவில்லை என்று கூறுகிறார்’ என்று உளறி பேச்சை முடித்தேன்!!

மறுபடியும் தொடரும்.. .. .. ..

Wednesday 20 October 2010

உரப்படை:

முத்துச்சிதறலில் சமையல் குறிப்பு வந்து நாட்களாகி விட்டன. இன்றைய சமையல் முத்தாக எல்லோருக்கும் பிடித்த கார வகை ஏதேனும் போடலாம் என்ற நினைப்பு வந்த போது உரப்படையின் ஞாபகம் உடனே வந்தது. இந்த உரப்படை தமிழ் நாட்டில் ஊருக்கு ஊர் வித்தியாசப்படும். அதுவும் தஞ்சை மாவட்டத்தில் இது வீட்டுக்கு வீடு மாறுபட்டிருக்கும் செய்முறையில். ஆனால் சுவை என்னவோ ஒன்றை விட மற்றொன்று மிஞ்சியே இருக்கும். இந்த உரப்படை சமீபத்தில் என் சினேகிதியிடம் கற்றது. மாலை நேரத்தில் மழைக்காலத்தில் இதன் சுவையே அபாரம்தான்!! செய்து பாருங்கள்!


உரப்படை:

தேவையானவை:

புழுங்கலரிசி - ஒன்றரை கப்

சோம்பு- 1 ஸ்பூன்

மிளகாய் வற்றல்-6
தேவையான உப்பு

பொட்டுக்கடலை- 3 மேசைக்கரண்டி

மெல்லியதாக அரிந்த பெரிய வெங்காயம்-1

கறிவேப்பிலை- சில இலைகள்

பொடியாக அரிந்த கொத்தமல்லி- கால் கப்

பொரிக்கத் தேவையான எண்ணெய்


செய்முறை:


பொட்டுக்கடலையை நன்கு பொடித்து மாவாக்கவும்.

புழுங்கலரிசியை ஊறவைத்து சோம்பு, உப்பு, மிளகாய் வற்றலுடன் கெட்டியாக ஆரைக்கவும்.

பொட்டுக்கடலை மாவைச் சேர்த்துப் பிசையவும்.

வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து நன்கு பிசைந்து துணியில் வடையை விட சற்று மெல்லியதாக தட்டி, சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

சூடான சுவையான உரப்படை தயார்!!

Friday 15 October 2010

முத்துக்குவியல்-3


1. எழுத்தாளர் அனுராதா ரமணன் தான் இறப்பதற்கு 3 மாதங்கள் முன் ஒரு மாத நாவலில் தனது ‘மன ஊஞ்சலில்’ நூலில் வரும் சில பகுதிகளை எழுதியிருந்தார்.

“ வலிகள் வரும்போதெல்லாம் நான் இரு வழிகளை கடை பிடித்தேன்.

ஒன்று:

அந்த வலியை கண்களை மூடிக்கொண்டு அனுபவிப்பது. “ இது எப்படி சாத்தியம்?” என்று கேட்பவர்களுக்கெல்லாம் நான் சொல்லிக்கொள்வது ஒன்றுதான். நம் மனதை ஒன்று திரட்டி அதாவது ஒருமுகப்படுத்தி- வலிக்கும் பாகத்தில் வைக்க வேண்டும். பழக்கமாகும் வரையில் கஷ்டம்தான். அப்போதுதான் இதையும் விட வலி வரும்போது தாங்க முடியும்.

இரண்டு:

வலியை மறக்க வேறு எதிலாவது மனதைச் செலுத்துதல்-மனதுக்கு பிடித்த சம்பவங்கள், மனிதர்கள்-இது மாதிரி. எனக்கு நெஞ்சு வலி வரும்போதெல்லாம் எனக்குப் பிடித்த இடங்களுக்கு பயணம் செய்யப்போய் விடுவேன். எப்போது தூங்குவேன் என்று எனக்கே தெரியாது. ஆனால் இது போன்ற மரண அவஸ்தையின் முடிவில் எனக்காக இனிமையானதொரு நாள் காத்திருப்பதாக நினைப்பேன். எனக்கு ஒவ்வொரு விடியலும் அதி முக்கியமானது. வாழ்க்கை தன் புதுப்பக்கத்தை எனக்காக திறந்து வைக்கிறது.. .. ..

படித்தபோது மனசு கனமானது. வாழ்க்கையில் நம்மை அடித்துப்போடும் துரோகங்களையும் உடலைத் துடிக்க வைக்கும் நோய்களின் கொடுமைகளையும் எதிர்த்துப்போராட மிகுந்த மன வலிமை வேண்டும். அது அவர்களுக்கு அதிகமாகவே இருந்திருப்பதை அறியும்போது மானசீகமாக ஒரு மலர் வளையத்தை மனசு அவர்கள்மீது அணிவிக்கிறது!

2. சமீபத்தில் ரசித்த பழமொழி:

“ பேசாத வார்த்தைகளுக்கு நீ எஜமானன்.
 பேசிய வார்த்தைகள் உனக்கு எஜமானன்”

- கார்லைல்-


3. இன்றைய பள்ளிக் கல்வியில் பல நவீன தொழில் நுட்பங்கள் வந்தாலும் இன்னும் கரும்பலகையையும் சாக்பீஸையும் உபயோகிப்பது பல கிராமங்களில் தொடர்கிறது. எப்போதும் இந்த சாக்பீஸுடனேயே உறவாடும் ஆசிரியர்களில் 40 சதவிகிதம் பேர் மூச்சுக்குழல் நோய் பாதிக்கப்பட்டு அவதியுறுகிறார்கள் என்று சர்வே ஒன்று கூறுகிறது. காரணம் முன்பெல்லாம் கார்பன் கார்பனேட் மட்டும் கலக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட சாக்பீஸ் இன்று ஜிப்ஸம் என்ற வேதிப்பொருளும் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. இது உடலுக்கு பல பிரச்சினைகளைக் கொடுக்கிறது.

4. மாத்திரைகள் எடுப்பவர்கள் அந்த சமயத்தில் ஆல்கஹாலும் சேர்த்து எடுப்பது உடலுக்கு பல பிரச்சினைகளை உண்டு பண்ணுகிறது. ஆஸ்பிரினுடன் ஆல்கஹால் எடுக்கும்போது அதன் பலன் 25 சதவிகிதம் அழிக்கப்படுகிறது. பாரசிட்டமாலுடன் ஆல்கஹால் எடுக்கும்போது இரண்டுமே கல்லீரலில் சிதைக்கப்படுகின்றன. அதனால் கல்லீரலில் பாதிப்பு ஏற்படுகிறது.

5. ரொம்ப நாட்களுக்கு முன் நடந்த உண்மை சம்பவம். ஒரு பெண்கள் மலரில் ஒரு சினேகிதி எழுதியதைப் படிக்க நேர்ந்தது.

அவரின் தம்பியும் அவருடைய உறவினர் மகனும், கிணற்றில் பொருத்தியிருந்த மோட்டாரில் நீர்க்கசிவு இருந்ததால் அதை ஏனென்று பார்க்க கிணற்றுக்குள் இறங்கியிருக்கிறார்கள். கிணற்றின் பைப்பை பிடித்துக்கொண்டு இறங்கி தண்ணீர் மட்டம் வரை சென்று பார்த்திருக்கிறார்கள். தண்ணீரில் கொப்புளங்கள் போல வருவதையும் இலேசாக எண்ணெய்போல ஏதோ மிதப்பதையும் கண்டு குனிந்து பார்த்திருக்கிறார்கள். முகத்தில் அடித்த விஷ வாயு உடனடியாக அவர்களை தாக்கி கைப்பிடி நழுவ சமாளிக்க முடியாமல் தண்ணீரில் இருவரும் விழ, சினேகிதியின் அண்ணன் உடனேயே இறந்து விட்டார். உறவினர் மகனை மட்டும் தீயனைப்புப் படையினர் வந்து காப்பாற்றிவிட முடிந்தது. அவர் கடைசியில் எழுதியிருந்த வேண்டுகோள்:

“தயவு செய்து அபாயகரமான வேலைகளைத் தெரியாது செய்யாதீர்கள். மின்சாரம், காஸ் ஸ்டவ், நெருப்பு-இவைகளால் ஏற்படும் கோளாறுகளை நீங்களே சரி செய்யாதீர்கள். உயிர் விலைமதிப்பற்றது.

Saturday 9 October 2010

நல்லதோர் வீணை செய்தே.. .. ..


இது நடந்து கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாகி விட்டது. இருந்தாலும் நினைக்கும்போதெல்லாம் ‘ நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?’ என்ற பாரதியின் பாடல் நினைவில் எழாமல் இருப்பதில்லை.

சில முக்கிய வேலைகள் காரணமாக நான் என் மகனுடன் சில மாதங்கள் ஒரு பெரு நகரத்தில் வசிக்க வேண்டி வந்தது. சிறந்த பள்ளி இருப்பதாலும் உதவுவதற்கு எங்களின் நெருங்கிய குடும்ப நண்பர் இருந்ததாலும் நாங்கள் அந்த நகரத்தில் விரைவிலேயே குடியேறினோம். புற நகர்ப்பகுதியில் ஒரு அழகான வீடு பார்த்துக் கொடுத்ததுடன் மட்டுமல்லாது அருகில் வசித்த அவரது நண்பரையும் அறிமுகம் செய்து வைத்தார் எங்கள் நண்பர்.

நகரில் பெரியதொரு வணிகத்தில் ஈடுபட்டிருந்தார் அந்தக் குடும்பத்தலைவர். அவர் வீட்டுக்குப்போகும்போதெல்லாம் கையெடுத்துக் கும்பிட்டு ‘ வாங்கம்மா’ என்று சொல்லும்போது நாமும் அவரைக் கையெடுத்துக் கும்பிடலாம் போன்ற தோற்றம். வெள்ளை நிற வேட்டியிலும் சட்டையிலும் சிகப்பாக கம்பீரமான அழகுடன் எப்போதும் சிரித்த முகமாக இருப்பார். அவர் மனைவி இந்த விஷயங்களில் அவருக்கு பொருத்தமில்லை என்றுதான் சொல்ல வேண்டும். சாதாரண தோற்றம். ஆனால் மிகவும் தன்மையுடன் பழக ஆரம்பித்தார். எனக்கு எது வேண்டுமானாலும் எங்கள் குடும்ப நண்பருக்கு ஃபோன் செய்ய அனுமதிக்காமல் தானே எல்லாவற்றையும் வாங்கிக் கொடுப்பார். பெயர் லட்சுமி. மூன்று பெண் குழந்தைகள். மூத்த பெண் சாதாரண தோற்றம். ஒரு கால் சற்றே ஊனம். இரண்டாவது நல்ல நிறமும் அழகுமாக இருக்கும். மூன்றாவது அப்போதுதான் பிறந்த சில மாதங்களான கைக்குழந்தை. மகன் இல்லையென்பதால் என்னிடம் சொல்லாமலேயே சில சமயங்களில் என் மகனைத் தூக்கிக்கொண்டு சென்று விடுவார். எங்களுக்கிடையே பிரியமும் நட்பும் வளர ஆரம்பித்தது.

ஒரு நாள் காலை தன் குழந்தைகளுடன் என் வீட்டுக்கு வந்தார். என்னைப்பார்த்ததுமே அழ ஆரம்பித்தார். கண்ணீருடன் அவர் சொன்ன விஷயங்கள் என்னை உறைய வைத்தன. அவர் கணவருக்கு குடிப்பழக்கம் அதிகம் என்றும் அடிக்கடி இந்தப் பழக்கத்தைத் திருத்தும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்வது வழக்கம் என்று சொன்னபோது, என் மனக்கண் முன் அவரின் தோற்றம் எழுந்து இதையெல்லாம் நம்பக்கூட முடியாமல் என்னை பிரமிக்க வைத்தது. கழுத்திலும் தோள்பட்டையிலும் இரத்தக் காயங்கள். அவர் அடித்த காயங்கள் என்று அழுதார். கூடவே அந்தப் பெண் குழந்தைகளும் அழுதன. அவர்களை அணைத்து ஆறுதல் சொல்லி சாப்பிட வைத்தேன். அவ்வப்போது இந்த நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டுதான் இருந்தன. அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டபோதெல்லாம் குழந்தைகள் மிரட்சியுடன் என் வீட்டுக்கு ஓடி வந்து விடும். நான் சாப்பிட வைப்பதும் ஆறுதல் சொல்வதும் அவ்வபோது நடக்கும்.


ஒரு நாள் இரவு குழந்தைகளைத் தூங்க வைத்து விட்டு என்னிடம் வந்து பேசிக்கொண்டு இருந்தார். அவருடைய வீட்டு அருகில் ஒரு சிறிய ஆழமான நீர்த்தேக்கம் இருக்கும். அதைச் சுட்டிக் காண்பித்து, ‘நேற்று கூட இதில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளலாமென்று முடிவு செதேன் அக்கா. அந்த நேரம் சின்னக் குழந்தை விழித்து விட்டதால் அதைச் செய்ய முடியாமல் போய் விட்டது’ என்றார். மனம் முழுவதும் நிரம்பிய வேதனையுடன் அவருக்கு ஆறுதலும் புத்திமதியும் சொல்லி ‘அப்படி எதுவும் பண்ணினால் இந்த மூன்று பெண் குழந்தைகளின் கதி என்னாகிறது? அதை நினைத்துப் பார்க்கவில்லையா நீங்கள்?’ என்று கேட்டேன். அதற்கு அவர் வெறிச்சிட்ட கண்களுடன் ‘ மரணத்துக்குப்பிறகு நமக்கு என்ன தெரியும் அக்கா? குழந்தைகளைத் தெரியுமா அல்லது புருஷனைத்தான் தெரியுமா? ஆனால் ஒன்று நிச்சயம், எனக்கு அதால்தான் நீண்ட அமைதி கிடைக்கும்’ என்று சொன்னபோது என்னால் ஒன்றுமே பேச முடியவில்லை.

அதற்குப்பிறகும்கூட எதேச்சையாய் அவர் வீடு சென்றபோது Gas-ஐத் திறந்து வைத்திருந்ததைப்பார்த்து சப்தம் போட்டிருக்கிறேன். நான் இருந்தவரை ஆறுதல் சொல்லியும் திட்டியும் உரிமையுடன் கடிந்து கொண்டும் தற்கொலை முயற்சிகளிலிருந்து அவரை மீட்டிருக்கிறேன்.

அதற்கப்புறம் நான் முழு ஆண்டுத் தேர்வு என் மகனுக்கு முடிந்ததும் இங்கு வந்து விட்டேன். வந்து இரு மாதங்களுக்குள்ளேயே அவரது மரணச்செய்தி என் சினேகிதங்கள் மூலம் வந்து விட்டது. மனம் முழுவதும் வேதனையாகி அன்று முழுவதும் அமைதியாக இருக்க முடியவில்லை.

பிறகு விஷயங்கள் தெரிய வந்தன. குளியலறையில் அவர் கருகிக் கிடந்ததாகவும் அது தற்கொலையா அல்லது கொலையா என்று தெரியவில்லை என்றும் செய்திகள் வந்தன. அவர் மரணத்தருவாயில் தன் கணவர்தான் தன்னைக் கொன்றதாக வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். சொந்தங்கள் எல்லாம் ‘ மூன்று பெண் குழந்தைகள் இருக்கின்றன. அப்பா ஜெயிலுக்குப் போனால் குழந்தைகளின் வாழ்வு மாறி விடும். இப்படி வாக்குமூலம் கொடுக்காதே’ என்றெல்லாம் சொல்லியும் ‘ நான் இப்படி சொல்லவில்லையென்றால் அவர் நான் போனதும் உடனேயே மறு கல்யாணம் செய்து கொள்வார்’ என்று சொல்லி மறுத்தாராம்.

ஆனால் அவர் இறந்த பின் சிறைக்குச்சென்ற அவர் கணவர் ஜாமீனில் வந்து அவர் கூறியபடியேதான் செய்தார்-ஒரு சின்னப் பெண்னைத் திருமணம் செய்து கொண்டார். சில மாதங்களில் நான் தஞ்சை சென்ற போது அவர் சகோதரி வீட்டு மேலாளர் வீட்டுக்கு வந்து அந்தக் குழந்தைகள் என்னை பார்க்க ஆசைப்படுவதாககூறி வீட்டுக்கு அழைத்தார். லட்சுமியின் சகோதரி வீடு சென்று அந்தக் குழந்தைகளைப் பார்த்தபோது மனசு அப்படியே கனத்துப் போயிற்று.


இரண்டு குழந்தைகளும் என்னருகில் வந்து நின்று அழுதபோது, பெற்றவர்களிடையே ஏற்பட்ட போராட்டத்திற்கு இந்த பச்சிளம் குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள் என்று ஆத்திரம்தான் பொங்கியது. ஒரு அருமையான வாழ்க்கை எப்படியெல்லாம் சிதைந்து போய்விட்டது? பணம் இருக்கலாம், சொந்தங்கள் இருக்கலாம், ஆனால் இந்தக்குழந்தைகளுக்கு பெற்றோரின் அரவணைப்பு, பாசம், பாதுகாப்பு எதுவுமன்றி, மனக்காயங்களுடன் இந்த குழந்தைகளின் எதிர்காலம் எப்படியிருக்கும்?

பாரதியாரின் வார்த்தைகள்தான் நினைவுக்கு வந்தன.

“ நல்லதோர் வீணை செய்தே-அதை

நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ?”.. .. .. .. ..

Sunday 3 October 2010

வணக்கம்! வந்தனம்!!

இது சில வருடங்களுக்கு முன் வரைந்தது. போஸ்டர் கலரில்தான் வரைந்திருக்கிறேன். எங்கள் நிறுவனத்தில் மாட்டி வைத்திருக்கிறேன்.