Friday 5 May 2017

திருவையாறு பஞ்சநாதேஸ்வரர்-[ பாகம் இரண்டு]!!!

தல விருட்சம் வில்வம். சூரிய புஷ்கரணியும் காவிரியும் தீர்த்தமாகும்.
இறைவனின் திருநாமங்கள்: ஐயாற்றீசர், செம்பொற்சோதீஸ்வரர், பஞ்சநாதேஸ்வரர்
இறைவி: தர்மசம்வர்த்தினி, அறம் வளர்த்த நாயகி, திரிபுரசுந்தரி.

குளத்தினுள் சிறு மண்டபம்!
தெற்கு கோபுர வாசல் வழியே நாம் நுழைவோம்.
தெற்கு கோபுர வாசலுக்கு நேரே காவிரி படித்துறை அமைந்துள்ளது. இந்த காவிரி நதியில் நீராடுவதை அப்பர் சுவாமிகள் வெகுவாக சிறப்பித்துள்ளார். புஷ்பமண்டப படித்துறை என்ற இத்துறையில் நீராடும் பக்தர்களை, ஐயாறப்பர் பெருஞ்செல்வந்தர்களாக மாற்றுவார் என்பது அப்பரின் வாக்கு.
இத்தலப் படித்துறையில் மார்கழி மாதம் கடைசி நாளன்று காவிரி அன்னை இங்கு தங்கி, ஐயாறப்பரை வழிபட்டு மறுநாள், தைப் பிறப்பன்று வருணனை அடைந்ததாக புராண வரலாறு கூறுகிறது. எனவே, பெண்கள் இன்றும் மார்கழி கடைசி நாளன்று இரவு இங்கு தங்கி ஐயாறப்பரை வழிபட்டு, தை முதல் தேதியன்று இந்தப் படித்துறையில் பொங்கல் தயாரித்து, காவிரி அன்னைக்கு மங்கலப் பொருட்களுடன் படைத்து வழிபடுகிறார்கள்.



தெற்கு கோபுர வாசலில் இடது புறமாக ஆட்கொண்டார் சன்னதியும் வலது புறமாக உய்யக்கொண்டார் சன்னதியும் இருக்கின்றன. இவர்கள் தான் நுழைவாசலில் துவார பாலகர்களாக இருக்கிறார்கள்.

தென் கைலாயம்
இச்சந்நிதியில் எப்போதும் குங்கிலியம் இங்கு மணந்து கொண்டே இருக்கும். பக்தர்கள் இங்குள்ள குண்டத்தில் குங்கிலியம் அர்ப்பணிப்பார்கள். சிவபெருமான் சுசரிதன் என்ற சிறுவனை எமனிடமிருந்து காப்பாற்றிய சமயம் எடுத்த உருவமே ஆட்கொண்டார். இவரை வணங்கி விட்டு கோவிலுக்குச் செல்வது ஒரு மரபு. இவரை வணங்கினால் எமபயம் நீங்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.



தெற்கு வாசல் தாண்டி உள்ளே நுழைந்ததும் இடப்புறமாக அமர்ந்துள்ளார் ஓலமிட்ட விநாயகர். சுந்தரரும், சேரமான் பெருமானும் திருவையாறு வரும் போது காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிகொண்டிருந்தது. கலங்கி அக்கரையில் நின்ற சுந்தரர் பதிகம் பாட, இக்கரையில் இருந்த விநாயகர் "ஓலம் ஓலம்" என்று குரல் கொடுத்து காவிரியில் வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்தி அவரை அழைத்து வந்ததால் இங்குள்ள விநாயகர் ஓலமிட்ட விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.

தென் கைலாயம் நுழைவாயில்
திருவையாறு ஐயாரப்பர் கோவில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் 7 நிலைகளையுடைய ராஜகோபுரமும், 5 பிரகாரங்களும் உள்ள ஒரு பெரிய கோவிலாகும்.முதல் பிரகாரத்தில் எழுந்தருளியுள்ள தக்ஷிணாமூர்த்தம் மிகச் சிறப்புடையது. இரண்டாம் பிரகாரத்தில் சோமஸ்கந்தருக்கு தனி ஆலயம் உள்ளது. அருகில் உள்ள ஜப்பேசுரமண்டபத்தில் பஞ்சபூத லிங்கங்களும், சப்தமாதர்களும், ஆதிவிநாயகரும், நவகிரகங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றன. இலக்குமிக்கு இரண்டாம் பிராகாரத்தில் தனிக்கோயில் இருக்கின்றது. வெள்ளிக் கிழமைதோறும் இலக்குமி புறப்பாடு இத்தலத்தில் நடைபெற்று வருகின்றது.


மூன்றாம் பிரகாரத்தில் கிழக்கிலும் தெற்கிலும் இருகோபுரங்கள் உள்ளன.  நான்காம் பிரகாரத்தில் சூரிய புஷ்கரணி தீர்த்தம்,. இச்சுற்றின் 4 புறமும் கோபுரங்கள் இருக்கின்றன. ஐந்தாம் பிரகாரத்தில் கிழக்கு நோக்கிய ஐயாரப்பன் சந்நிதியும் திரிபுரசுந்தரி சந்நிதியும் இருக்கிறது. சுவாமி சந்நிதியிலும், அம்பாள் சந்நிதியிலும் தனித்தனியாக ராஜகோபுரங்கள் உள்ளன. இறைவன் சந்நிதி கருவறை விமானத்தின் பின்புறக் கோஷ்டத்தில் அமைந்துள்ள அர்த்தநாரீஸ்வரர் சிற்பம் சற்று மாறுபட்டது. வழக்கமாக இந்த அர்த்தநாரீஸ்வரர் சிற்பங்களில் சிவபெருமான் வலப்புறமும், உமையம்மை இடப்புறமும் தான் காணப்படுவர். ஆனால் இங்கு சிவன் இடப்புறமும் உமை வலப்புறமும் அமைந்திருப்பதைக் காணலாம்.



மேலும் இறைவன் கருவறையை சுற்றி வர முடியாது என்பதும் இத்தலத்தின் முக்கிய அம்சம், இறைவனின் கருவறையில் விரிசடை படர்ந்திருப்பதால் அதை சென்று மிதிக்கக் கூடாது என்பதால் கருவறை சுற்றுப் பிராகாரத்தை வலம் வரக்கூடாது என்பது இத்தலத்தில் கடைபிடிக்கப்படுகிறது.



இறைவனுக்கும், இறைவிக்கும் கிழக்கு நோக்கியவாறு உள்ள சந்நிதிகளைக் கொண்டு தனித்தனி கோவில்கள் உள்ளன. மூலவர் ஐயாரப்பர் ஒரு சுயம்பு லிங்கமாகும். இந்த லிங்கம் ஒரு மணல் லிங்கம் ஆகையால் அபிஷேகம் செய்யப்படுவதில்லை. ஆவுடையார் மேல் மட்டுமே அபிஷேகம் செய்யப்படும். லிங்கத் திருமேனிக்கு புனுகுச் சட்டம் மட்டுமே சாத்தப்பெறும்.

வட கைலாயம்! இது பூட்டி வைக்கப்பட்டிருக்கிறது!
இறைவி தர்மசம்வர்த்தினி காஞ்சி காமாட்சியைப் போன்றே இறைவனிடம் இருநாழி நெல் பெற்று 32 அறங்களையும் செய்தமையால் அறம் வளர்த்த நாயகி என்றும் அறியப்படுகிறாள். இத்தலத்தில் இறைவி இடக்கரம் இடுப்பில் ஊன்றியுள்ளபடியும், மேல் இரு கரங்களில் சங்கு சக்கரம் போன்றவையுடன் காணப்படுவதால் இத்தலத்தில் அம்பிகை மஹாவிஷ்னு ஸ்வரூபத்தில் தோற்றமளிக்கிறாள்.

இறைவன் சன்னதி!
இத்தலத்தில் முருகப்பெருமான் வில், வேல், அம்பு ஆகிய படைக்கலங்களுடன் வில்லேந்திய வேலவனாக "தனுசுசுப்ரமணியம்" என்ற பெயருடன் விளஙகுகிறார்.

சுற்றுப்பிரகாரத்தில் ஓவியங்கள்!
மூன்றாம் பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் நின்று வடக்கு நோக்கி ஐயாறா என்று அழைத்தால் ஏழு முறை அது எதிரொலிக்கும்.



இத்தலத்திலுள்ள வடகயிலாயம், தென்கயிலாயம் ஆகிய இரு சந்நிதிகள் முக்கியமானவை.. இக்கோவிலின் மூன்றாம் பிரகாரத்தின் வடபுறம் "ஓலோக மாதேவீச்சுரம்' என்ற கற்கோவில் உள்ளது. இது "வட கைலாயம்" எனப்படும். அப்பர் கைலாயக் காட்சி கண்ட வட கயிலாயம் முதல் இராஜராஜசோழனின் பட்டத்தரசி உலகமகாதேவியால் எழுப்பப்பட்டது. மூன்றாம் பிரகாரத்தின் தென்புறம் "தென் கைலாயம்" எனப்படும் கற்கோவில் உள்ளது. இது முதலாம் இராஜேந்தர சோழனின் மனைவிகளில் ஒருவரான பஞ்சவன்மாதேவியால் பழுது பார்க்கப்பட்டு திருப்பணி செய்யப்பட்டுள்ளது.. சந்நிதி முன்னுள்ள சொக்கட்டான் மண்டபம், கீழைக் கோபுரத்திற்கு அருகிலுள்ள நூற்றுக்கால் மண்டபம் ஆகியவை கட்டட, சிற்பக்கலைச் சிறப்பு மிக்கவை.



சமயக்குரவர்களில் ஒருவரான அப்பருக்கு சிவ பெருமான் திருவையாறில் கயிலைக்காட்சியினைக் காட்டி அருள் புரிந்தாகவும், இதனால் வடக்கே காசிக்கு தீர்த்த யாத்திரை செல்ல முடியாத பக்தர்கள் தென் கயிலாயமான திருவையாறு வந்தால் காசிக்குச் சென்ற பலன் கிடைக்கும் என்று தல புராணம் கூறுகிறது. சூரியனுடைய வழியில்வந்த ஸ்ரீ ராமன் இந்தக் கோயிலுக்கு வந்து இறைவனை பூஜித்து  வணங்கினார்.பொதுவாக சிவாலய‌ங்களில் நவக்கிரகங்கள் வேறு வேறு திசையில் இருக்கும்.
இதற்கு நேர் மாறாக திருவையாறில் நவக்கிரகங்களில் ஏனைய எட்டு கிரகங்கள் சூரியனையே பார்த்து நிற்கின்றனர்.

அம்மன் சன்னதியில் அழகு மிக்க தூண்கள்!
இங்குள்ள தியான மண்டபம் அல்லது முக்தி மண்டபம் சுண்ணாம்பு, கருப்பட்டியால் கட்டப்பட்டது. முக்தி மண்டபத்தில் விஷ்ணு, நந்தி தேவர், அகத்திய முனிவர் உபதேசம் பெற்றனர்.



இறைவனின் கோவிலுக்கு ஈசான்ய மூலையில் அம்மனின் கோவில் இரு திருச்சுற்றுகளுடன் உள்ளன. எல்லா நாட்களும் நல்ல நாட்களே என்பதை வலியுறுத்தும் வகையில் இங்கு அம்பாளுக்கு அஷ்டமி திதியில் இரவு நேரத்தில் திருக்கல்யாணம் நடத்தப்படுகிறது.

மிகவும் சுத்தமாக கோயிலைப் பேணி பாதுகாக்கிறார்கள். வட கைலாயம், முக்தி மண்டபம் பூட்டி வைக்கப்பட்டிருக்கின்றன! வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு அழகிய கோவிலை தரிசித்த திருப்தியுடன் திரும்பினேன்!!


10 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

அழகழகான படங்களுடன் அற்புதமான தகவல்களாக அளித்துள்ளீர்கள். நேரில் சென்று தரிஸித்து வந்தது போல மிகவும் மனதுக்குத் திருப்தியாக உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள்.

இராய செல்லப்பா said...

ஐயாரப்பன்-அறம் வளர்த்த நாயகி- இருவரின் தரிசனம் அமர்ந்த இடத்திலிருந்தே கிடைக்கப்பெற்றோம். அந்தப் புண்ணியத்தில் பாதியை உங்களுக்கே தரலாம் என்று எண்ணுகிறேன்.

-இராய செல்லப்பா நியூஜெர்சி

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

பணி நிறைவுப்பணிகள் காரணமாக சில நாள்கள் வலைப்பக்கம் வர முடியவில்லை. பணி நிறைவு விழா தொடர்பான பதிவு இதோ, வாய்ப்பிருக்கும்போது வாசிக்க வருக. இனி தொடர்ந்து பதிவுகள் மூலமாக சந்திப்போம் : http://drbjambulingam.blogspot.com/2017/05/blog-post_4.html
பல முறை இக்கோயிலுக்குச் சென்றுள்ளேன். இன்று தங்கள் பதிவின் மூலமாக மற்றொரு முறை செல்லும் வாய்ப்பு கிடைத்தது. நன்றி.

ஸ்ரீராம். said...

அழகிய கோவில். அழகிய படங்கள்.

வெங்கட் நாகராஜ் said...

அழகான கோவில். இது வரை சென்றதில்லை. சென்று வரத் தோன்றுகிறது.

இரண்டு பகுதிகளையும் இப்போது தான் படித்தேன். பகிர்ந்து கொண்டதற்கு நன்றிம்மா....

கரந்தை ஜெயக்குமார் said...

மிகவும் ரசித்து எழுதியிருக்கிறீர்கள் சகோதரியாரே
எனது சொந்த ஊர் திருவையாறு
சிறுவயது முதலே பலமுறை சென்றுவந்த கோயில்
நன்றி சகோதரியாரே

KILLERGEE Devakottai said...

விடயங்களும், புகைப்படங்களும் அருமை.

Nagendra Bharathi said...

அருமை

Pandian Subramaniam said...

கோவில் குறித்த முக்கிய குறிப்புகள், அழகிய படங்களுடன் சிறந்த பகிர்வு.

கோமதி அரசு said...

தரிசனம் செய்து பல வருடங்கள் ஆகி விட்டது. இப்போது மீண்டும் தரிசனம் செய்தேன் உங்கள் பதிவில் . படங்கள் மிக அழகு.